தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல்


தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2019 3:30 AM IST (Updated: 14 Dec 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி. வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேரமில்லா நேரத்தின்போது தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரியை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 167 கோடி வரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு வசூலித்து கொடுத்திருக்கிறது. மேலும் அதிகமாக ஜி.எஸ்.டி. வரி வசூலித்து கொடுத்த மாநிலங்களில் 2-வது இடத்தையும் தமிழகம் பெற்றிருக்கிறது.

இருந்தபோதிலும் ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பல முறை வேண்டுகோள் விடுத்தும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையான ரூ.4 ஆயிரத்து 72 கோடியும், ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையான ரூ.3 ஆயிரத்து 236 கோடியும் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த தொகையை சரியான தருணத்தில் வழங்கினால் நிதி பற்றாக்குறை இன்றி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமல்படுத்துவதற்கு பயன் உள்ளதாக இருக்கும். மேலும் சிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு, ஊக்கத்தொகையாகவும் அமையும். எனவே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, ஜி.எஸ்.டி. இழப்பீடு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story