டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்கள் விடுவிப்பு


டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்கள் விடுவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 2:01 AM GMT (Updated: 16 Dec 2019 2:01 AM GMT)

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 50 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்தது.  இதனால் ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க ராணுவம் சென்றது. வதந்திகள் பரவாமல் தடுக்க, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.  ஆனால், அமைதியாக போராட்டம் நடத்திய தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, வன்முறைக்கு வித்திட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.  போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி சிறுபான்மை ஆணையம் கல்காஜி காவல் நிலையத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.  அதில், காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை விடுவியுங்கள்.  அல்லது உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மதிப்புமிக்க மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து இன்று காலை 50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  அவர்களில் 35 பேர் கல்காஜி காவல் நிலையத்தில் இருந்தும், 15 பேர் நியூ பிரெண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து, இன்று மாலை 3 மணிக்குள் இணக்க அறிக்கை ஒன்றை பதிவு செய்யும்படியும் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  அதனை செய்ய தவறினால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story