குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை திசைதிருப்ப பார்க்கிறது - அமித் ஷா குற்றச்சாட்டு


குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை திசைதிருப்ப பார்க்கிறது - அமித் ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Dec 2019 11:15 PM GMT (Updated: 17 Dec 2019 10:24 PM GMT)

குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை திசைதிருப்ப பார்ப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், இந்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார். அதில், அவர் பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவுமே இல்லை. எனவே, முஸ்லிம்கள் பயப்பட வேண்டாம். குடியுரிமை சட்ட நகல், இணையதளத்தில் உள்ளது. போராட்டம் நடத்தும் மாணவர்களும், மற்றவர்களும் அதை முறையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை திசை திருப்ப பார்க்கிறது. 3 நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தல்களை சந்தித்து அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிப்பதே இதன் நோக்கம். என்ன நடந்தாலும், அவர்கள் குடியுரிமை பெற்று, கவுரவமாக வாழ்வதை உறுதி செய்ய மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. எதிர்ப்பவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story