ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை : சிவசேனா புது விளக்கம்


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை : சிவசேனா புது விளக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2019 10:28 AM GMT (Updated: 19 Dec 2019 10:28 AM GMT)

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து பாஜக -சிவசேனா சந்தித்தன. இந்தக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்றாலும், அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட மோதலால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய  சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சி அமைத்தது. 

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்த போதிலும், பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க சிவசேனா மறுத்துவிட்டது. மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அண்மையில் மனு அளித்தபோது, அதில் சிவசேனா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய போதிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா சேரவில்லை என்றார். நாடாளுமன்றத்தில் சிவசேனா சொந்த அடையாளத்துடன் சுதந்திரமாக செயல்படும் என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டார்.

அதேபோல், மராட்டியத்தில் இன்று குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த  போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் சிவசேனா புறக்கணித்தது. இதனால், மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
  • chat