குடியுரிமை திருத்த சட்டம்; மங்களூரு போராட்டத்தில் 2 பேர் பலி


குடியுரிமை திருத்த சட்டம்; மங்களூரு போராட்டத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2019 5:59 PM GMT (Updated: 19 Dec 2019 5:59 PM GMT)

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

பெங்களூரு,

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மாணவர்கள் தரப்பிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் சில அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து கர்நாடகா போலீசார் பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இன்று நடந்த போராட்டத்தில் பிரபல வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கலந்து கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் மங்களூருவில் இன்று நடைபெற்ற கலவரத்தில் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இது குறித்து மங்களூரு காவல்துறை ஆணையர் பி.எஸ்.ஹர்ஷா கூறிய போது, “போராட்டத்தின் போது காவல்துறையினர் மீது சிலர் கடும் தாக்குதல் நடத்தினர். அதனால் பாதுகாப்பு கருதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பலத்த காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். போலீசார் தரப்பில் 20 க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் ” என்று தெரிவித்தார்.

Next Story