பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையடுத்து, மீண்டும் இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டு வரும் நோக்கில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக்கில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற கேபினட் மந்திரிகளும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், சி இ ஒ அமிதாப் காந்த் மற்றும் பிற நிபுணர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமர் மோடியின் ஆலோசகர் பிபெக் திப்ராயும் கலந்து கொண்டார்.
2019-2020 நிதி ஆண்டில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள சூழல் மற்றும் பட்ஜெட் நடைமுறைகள் துவங்கியுள்ள சமயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி, நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்து நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story