பாகிஸ்தான், வங்காளதேசம் எல்லை பகுதிகளில் புதிய இரும்பு வேலி: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை


பாகிஸ்தான், வங்காளதேசம் எல்லை பகுதிகளில் புதிய இரும்பு வேலி: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2020 2:08 AM IST (Updated: 11 Jan 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கையாக, பாகிஸ்தான், வங்காளதேசம் எல்லை பகுதிகளில் புதிய இரும்பு வேலி அமைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து நாசவேலைகளை நடத்தி வருகின்றனர். இதைப்போல வங்காளதேசம் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஊடுருவலை தடுக்க பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லையின் முக்கியமான பகுதிகளில் புதிதாக இரும்பு வேலி அமைக்கப்படுகிறது.

அதன்படி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு இந்த வேலி அமைக்கப்பட்டு வருகிறது. அசாமை ஒட்டியுள்ள வங்காளதேச எல்லையிலும் சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இரும்பு கம்பிகளால் அமைக்கப்படும் இந்த வேலியின் மேல் பகுதியில் இரும்பு முட்சுருள்களும் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் பயன்பாட்டை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த திட்டம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கி.மீ. தொலைவுக்கு இரும்பு வேலி அமைக்க ரூ.2 கோடி செலவாகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story