லோக் ஆயுக்தா சட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


லோக் ஆயுக்தா சட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:15 PM GMT)

லோக் ஆயுக்தா சட்டத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக அரசு நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், ஊழலை ஒழிக்கும் வகையில் எந்த விதமான அதிகாரமும் இல்லாமல் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டுள்ளதாலும் அந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கரூரை சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும் மனுதாரர் ஆர்.ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூத்தீன் ஆஜராகி மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறி வாதங்களை எடுத்து வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், லோக் ஆயுக்தா குறித்து பிற மாநிலங்களில் எந்த மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன? என்பவை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Next Story