சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: காஷ்மீரில் செல்போன் சேவை முற்றிலும் சீரடைந்தது


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: காஷ்மீரில் செல்போன் சேவை முற்றிலும் சீரடைந்தது
x
தினத்தந்தி 18 Jan 2020 10:44 AM GMT (Updated: 2020-01-19T02:09:59+05:30)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து காஷ்மீரில் செல்போன் சேவை முழுவதும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 2 மாவட்டங்களில் இணையதள வசதியும் கொடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

பின்னர் அங்கு அமைதி திரும்பியதால் செல்போன் இணைய வசதியை தவிர பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் சில நாட்களில் ஜம்முவில் நீக்கப்பட்டன. ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து அமலில் இருந்தன. பின்னர் அங்கும் அமைதி திரும்ப தொடங்கியதால் தொலைபேசி இணைப்புகள், போஸ்ட்பெய்டு செல்போன் இணைப்புகள் மட்டும் சமீபத்தில் வழங்கப்பட்டன.

ஆனாலும் பிரீபெய்டு செல்போன் இணைப்புகள், இணையதள வசதி போன்றவை தொடர்ந்து மறுக்கப்பட்டன. இதனால் மாணவர்கள், வர்த்தகர்கள், ஊடக துறையினர் என பல்வேறு தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது குறித்து ஒரு வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என கடந்த 10-ந்தேதி அரசுக்கு உத்தரவிட்டது. இணையதளத்தை பயன்படுத்துவது அடிப்படை உரிமை எனக்கூறிய நீதிபதிகள், இணையதள சேவை முடக்கத்தை உடனடியாக நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் நேற்று பிரீபெய்டு செல்போன் வசதி மீண்டும் வழங்கப்பட்டன. குறிப்பாக குரல் அழைப்புகள், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டன. இதன் மூலம் காஷ்மீர் முழுவதும் செல்போன் சேவை முற்றிலும் சீரடைந்துள்ளது.

இதைப்போல குப்வாரா, பந்திப்போரா மாவட்டங்களில் போஸ்ட்பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 2ஜி இணையதள வசதியும் மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களுக்கும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு செல்போன் இணைப்பு மற்றும் இணையதள வசதி மீண்டும் கிடைத்திருப்பதால் காஷ்மீர் மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர். பலரும் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை செல்போனில் அழைத்து வாழ்த்துக்களை பரிமாறினர்.

இது குறித்து ஸ்ரீநகரை சேர்ந்த சகீல் சோபி என்பவர் கூறுகையில், ‘இது (செல்போன் இணைப்பு) உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி. இங்கு போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை விட, பிரீபெய்டு வாடிக்கையாளர்கள்தான் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தற்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு எனது பிரீபெய்டு எண்தான் கொடுத்திருந்தேன். செல்போன் சேவை துண்டிப்பால் என்னைப்போன்ற பலரும் மிகுந்த சிரமம் அனுபவித்து வந்தனர்’ என்று கூறினார்.

இவ்வாறு செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பலரும், இது மிகவும் தாமதமான மற்றும் குறைவான நடவடிக்கை எனவும் குறைபட்டுக் கொண்டனர்.


Next Story