சீனாவுக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை


சீனாவுக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை
x
தினத்தந்தி 4 Feb 2020 10:20 AM GMT (Updated: 4 Feb 2020 10:20 AM GMT)

சீனாவுக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ்  கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுப் பிரச்சினையுடன் தொடங்கும் இது இறுதியில் உறுப்புகளை செயலிழக்க வைத்து உயிர் பலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.

இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 426 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் மற்ற நாடுகளில் இருந்து சென்றுள்ளோர் அவசர அவசரமாக சீனாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள பல நாடுகளும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப அந்நாடு முடிவு செய்துள்ளது. 

அதேபோல், இந்திய அரசும் சில நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர விசா கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மேலும், சீனர்கள் மற்றும் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகளின் வேலிட் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 7 முதல் டெல்லி -ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story