ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு


ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 March 2020 12:59 AM IST (Updated: 7 March 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு, அவர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு காவல்துறை அனுமதியை நிறுத்தி வைக்கலாம். அதன்மூலம் அவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது.

ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டவர்கள், குற்றவியல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும் காவல்துறை அனுமதியை மறுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story