ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்: உ.பி. முகாமில் கண்காணிப்பு


ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்: உ.பி. முகாமில் கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 March 2020 11:15 PM GMT (Updated: 10 March 2020 9:29 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஈரானில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது. பலியானோர் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஈரான் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க அங்குள்ள இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டது.

அதன் விளைவாக, முதல்கட்டமாக சில இந்தியர்களை அழைத்து வருவதற்காக, இந்திய விமானப்படையின் ராணுவ விமானம் புறப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து சி-17 குளோப்மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானம் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.

போர் தளவாடங்கள், ராணுவ துருப்புகள், மனிதாபிமான உதவிகள் போன்றவற்றை அதிக தொலைவில் உள்ள இடங்களுக்கு கொண்டு செல்ல இந்த விமானத்தைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.

அந்த விமானத்தில் ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் நேற்று அழைத்து வரப்பட்டனர். 25 ஆண்கள், 31 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 58 பேர் ஏற்றி வரப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மேலும் 529 இந்தியர்களின் உமிழ்நீர் மாதிரியும் கொண்டுவரப்பட்டது.

ராணுவ விமானம், ஹிண்டன் விமான தளத்தில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கப்பட்ட 58 இந்தியர்களும் ஹிண்டனில் மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்ட தனி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல்களை இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் அனுபம் பானர்ஜி தெரிவித்தார்.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இத்தகவலை தெரிவித்தார். ஈரானில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு நடப்பதாக அவர் கூறினார்.


Next Story