அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற திக் விஜய்சிங் தடுத்து நிறுத்தம்


அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க  சென்ற திக் விஜய்சிங் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 18 March 2020 5:20 AM GMT (Updated: 2020-03-18T10:50:53+05:30)

மத்திய பிரதேச அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற திக் விஜய்சிங்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பெங்களூரு,

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.  அவர்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களை பாஜக பிடித்து வைத்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு செல்ல முயன்றார். ஆனால், போலீசார் அனுமதி மறுத்ததால்  விடுதிக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, திக் விஜய் சிங்கை  அம்ருதஹல்லி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங் கூறும்போது, அந்த எம்எல்ஏக்கள் சிறையாக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.தனிப்பட்ட முறையில் நான் 5 எம்எல்ஏக்களுடன் பேசினேன். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24மணி நேரமும் காவல்துறை உள்ளனர் ”என்று அவர் கூறினார். 

Next Story