தாராவியை சேர்ந்தவர் கொரோனா பாதிப்பால் பலி- குடிசைப்பகுதி மக்களிடையே பரபரப்பு


தாராவியை சேர்ந்தவர் கொரோனா பாதிப்பால் பலி- குடிசைப்பகுதி மக்களிடையே பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2020 3:28 AM GMT (Updated: 2 April 2020 3:28 AM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மராட்டிய மாநிலம் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56-வயதான அந்த நபருக்கு நேற்று மும்பை சியோன் மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய போது கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் வெளிநாடு எதுவும் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. 

5 சதுர கி.மீட்டர் பரப்பில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்பதால் மிகவும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாக தாராவி விளங்குகிறது. இந்தப்  பகுதியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து இருப்பது அப்பகுதி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த நபர் வசித்து வந்த  குடியிருப்பு முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் கட்டிடத்தில்  வசிப்பர்கள் அனைவரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மைய இடமாங்களில் ஒன்றாக  மும்பை விளங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  மும்பையில் மட்டும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 335 ஆக உள்ளது. 

Next Story