20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு விலக்கு; இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு


20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு விலக்கு; இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2020 12:00 AM GMT (Updated: 14 April 2020 11:48 PM GMT)

இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், வருகிற 20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தமிழகம், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், இந்த ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் உத்தரவிட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொண்டன.

இந்தநிலையில், பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நேற்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வருகிற மே 3-ந் தேதி வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

உலகெங்கும் பரவி வரும் கொரேனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போர் மகத்தான வலிமையுடனும், பிரம்மாண்டமான வேகத்துடனும் முன்னேறி வருகிறது. நீங்கள் அனைவரும் கடைப்பிடித்த கட்டுப்பாடு, பொறுமை மற்றும் தியாகம் ஆகியவற்றால் மட்டுமே நம் நாட்டில் கொரோனாவால் விளையும் தீமையை பெருமளவில் தவிர்க்க முடிந்திருக்கிறது.

நாட்டை காக்க நீங்கள் அளவிலாத வேதனையை சகித்துக் கொண்டு வருகிறீர்கள். சிலர் உணவுக்காகவும், சிலர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்காகவும், சிலர் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியில் தங்க நேர்ந்தது உள்ளிட்டவை தொடர்பாக நீங்கள் அனைவரும் எதிர் கொண்ட பிரச்சினைகளை நான் நன்றாக அறிவேன்.

இருந்தபோதிலும் நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்பு தன்மை கொண்ட சிப்பாயைப் போல நீங்கள் உங்கள் கடமையை ஆற்றி வருகிறீர்கள். இதுதான், நம்முடைய அரசியல் சாசனம் கூறும் “இந்தியாவின் மக்களாகிய நாம்” என்பதன் மாபெரும் வலிமை. அந்த வகையில் காண்பிக்கப்படும் ஒன்றிணைந்த வலிமை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் அன்று இந்திய மக்களாகிய நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான காணிக்கை ஆகும்.

அம்பேத்கரின் வாழ்க்கை, எந்த ஒரு சவாலையும் உறுதியுடனும் கடும் உழைப்புடனும் எதிர்கொள்ளும் வகையில் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு, விஷூ, பைசாகி, பெஹேலா பொய்சாக்கி என்று பல மாநிலங்களில் புத்தாண்டு துவங்கி உள்ளது. இது போன்ற ஊரடங்கு காலத்தில், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மிகுந்த கட்டுப்பாட்டுடன் தங்கள் வீட்டுக்குள் இருந்தே பண்டிகைகளை கொண்டாடுவது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியதாகும்.

புத்தாண்டான இன்று உங்கள் அனைவரின் ஆரோக்கியத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உலகெங்கும் கொரோனா நோய்த் தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக நீங்கள் அனைவரும் நன்கு அறிந்து இருப்பீர்கள். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா இந்த நோய்த் தொற்றை தடுப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகளில் நீங்கள் அனைவரும் பங்கேற்று, அந்த முயற்சிகளுக்கு சாட்சியங்களாகவும் விளங்கி வருகிறீர்கள்.

இந்தியாவில் முதல் நபருக்கு கொரேனா நோய் தாக்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நம் நாட்டுக்குள் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறை எட்டியதுமே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்த தொடங்கினோம். பல இடங்களில் வணிக வளாகங்கள், கிளப்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. கொரேனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 550-ஐ எட்டிய உடனேயே 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்று பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பிரச்சினை அதிகமாகும் வரை இந்தியா காத்து இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் உடனுக்கு உடன் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபோன்ற நெருக்கடியான நிலைமையில் மற்ற நாடுகளுடன் நம் நாட்டின் நிலையை ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது.

இருப்பினும் உலகின் வலிமையான நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாவுடன் ஒப்பிடும் போது, இன்று நாம் இந்த பிரச்சினையை மிகவும் சரியான முறையில் கையாண்டு இருக்கிறோம். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்துக்கு முன்பு உலகின் பல நாடுகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இணையாக இருந்தன. ஆனால் இன்று அந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு இந்தியாவை விட 25 அல்லது 30 மடங்கு அதிகமாக உள்ளது. அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இந்தியா மிகவும் வேகமாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவில் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். கடந்த சில நாட்களாக நமக்கு கிடைக்கும் அனுபவம், நாம் சரியான பாதையை தேர்ந்து எடுத்து இருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது.

சமூக விலகல் மற்றும் ஊரடங்கினால் நம் நாடு பெரிய அளவில் பலன் அடைந்து உள்ளது. பொருளாதார ரீதியாக மட்டும் இதனை பார்த்தால் நாம் மிகவும் அதிகமான விலை கொடுத்தது போல் இருக்கும். பொருளாதார இழப்பை விட மக்கள் உயிர் முக்கியம். மக்களின் உயிருக்கு ஒப்பீடு எதுவும் கிடையாது.

குறைந்த அளவிலான வசதிகளை கொண்ட நிலையில் நாம் தேர்ந்தெடுத்த பாதை என்பது இன்று உலகம் முழுவதும் பேசப்படும் பொருளாக உள்ளது. மாநில அரசுகளும் இடையறாது பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மிகுந்த பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டு உள்ளன.

இத்தனை கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவது உலக அளவில் மருத்துவ நிபுணர்களும் அரசுகளும் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அறிய நான் அனைத்து மாநில அரசுகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். ஊரடங்கு தொடர வேண்டும் என்று அனைவரும் ஆலோசனை வழங்கினார்கள். பல மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்து உள்ளன.

அனைத்து ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் வருகிற மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதாவது மே 3-ந் தேதி வரை ஒவ்வொருவரும் ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டுக்குள் இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் இதுநாள் வரை நாம் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை மேலும் தொடரவேண்டும். கொரோனா நோய்த்தொற்று புதிய இடங்களுக்கு பரவுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

மேலும் ஒரே ஒரு புதிய நோயாளி உருவானால் கூட நமக்கு கவலை அளிக்கும். கொரோனோ பாதிப்பால் ஏற்படும் மேலும் ஒரு மரணம் நம்முடைய அக்கறையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனவே, நோய்த் தொற்று தீவிரமாக உள்ள இடங்கள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அதிக நோய்த்தொற்று உள்ள இடங்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்தி மேலும் இது போன்ற இடங்கள் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தீவிர நோய்த்தொற்று உள்ள பகுதிகளை (‘ஹாட் ஸ்பாட்’) நம்முடைய கடுமையான உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எதிரான சவாலாக கருத வேண்டும். இனிவரும் வாரங்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரை நாம் மேலும் தீவிரமாக்க வேண்டும்.

வருகிற 20-ந் தேதி வரை ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவு ஊரடங்கை கடைப்பிடித்துள்ளது என்பது குறித்து தீவிரமாக ஆராயப்படும். இவற்றில் எந்த அளவு கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது கணக்கில் எடுக்கப்படும்.

இந்த சோதனையில் வெற்றி பெறும் பகுதிகள், தீவிர நோய்த்தொற்று பகுதி என்னும் அறிவிப்பில் இருந்து நீக்கப்படும். இந்த பகுதிகளில் 20-ந் தேதி முதல் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த அனுமதி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். வெளியில் செல்வதற்கான விதிமுறைகள் மிகவும் கடினமானதாக இருக்கும். ஊரடங்கு விதிமுறைகளை மீறினாலோ அல்லது நோய்த்தொற்று அதிகரிக்கும் ஆபத்து தோன்றினாலோ அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும்.

எனவே ஒவ்வொருவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களும் அவ்வாறு நடந்து கொள்வதை உறுதி செய்யவேண்டும். இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் புதன்கிழமை (இன்று) அரசால் வெளியிடப்படும். இதுபோன்ற குறிப்பிட்ட சில விதி விலக்குகள் ஏழை சகோதர சகோதரிகளின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அன்றாட கூலித் தொழிலாளர்களின் இடர்பாடுகளை களைவது எனது கடமை ஆகும். பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் போது அவர்களுடைய நலன் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும்.

குறுவை சாகுபடிக்கான நேரம் இது. விவசாயிகளின் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நாட்டில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன. வினியோகம் தொடர்பான பிரச்சினைகள் ஒவ்வொன்றாக களையப்பட்டு வருகின்றன.

சுகாதாரம் தொடர்பான கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் நாம் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஒன்று மட்டுமே இருந்தநிலையில், இன்று நாடு முழுவதும் 220 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளை தயார் செய்து இருக்கிறோம்.

இது மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கென்றே 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வசதிகள் நாளுக்கு நாள் மேலும் விரைவாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் இளம் விஞ்ஞானிகளிடம் நான் முன்வைக்கும் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் உலகின் நன்மைக்காகவும், மனித இனத்தின் நன்மைக்காகவும் கொரோனா நோய்த்தடுப்புக்கான மருந்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.

தற்போது கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடு மற்றும் பொறுமையை மேலும் தொடர்ந்தால், கொரோனா நோய்த்தொற்றை நாம் நிச்சயமாக தோற்கடிக்க முடியும். இந்த நம்பிக்கையுடன் கீழ்க்கண்ட 7 கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

* வீட்டில் உள்ள முதியவர்கள் மீது தனி கவனம் செலுத்துங்கள். குறிப்பாக தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அவர்களை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பாக விலக்கி வைக்க வேண்டும்.

* ஊரடங்கு மற்றும் சமூக விலகல் தொடர்பான ‘லட்சுமணன் கோட்டை’ உறுதியாக கடைப்பிடியுங்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை தவறாமல் அணிந்து கொள்ளுங்கள்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பாக ‘ஆயுஷ்’ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரையை தவறாமல் கடைப்பிடியுங்கள். வென்னீர் பருகுங்கள். வென்னீரால் கொப்பளியுங்கள்.

* ‘ஆரோக்கிய சேது’ செயலியை உங்கள் மொபைல் போனில் பதவிறக்கம் செய்து கொரோனா நோய் பரவாமல் இருக்க உதவுங்கள். மற்றவர்களும் பதவிறக்கம் செய்ய உத்வேகம் அளியுங்கள்.

* உங்களால் இயன்ற அளவு ஏழை குடும்பங்களுக்கு உதவுங்கள். குறிப்பாக அவர்கள் உணவு தேவையை பூர்த்தி செய்யுங்கள்.

* உங்கள் ஊழியர்களிடம் கருணையை காட்டுங்கள். அவர்களை இந்த நேரத்தில் பணியில் இருந்து நீக்காதீர்கள்.

* இந்த நாட்டின் கொரோனா போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோருக்கு மிகுந்த மரியாதையை அளியுங்கள். ஊரடங்கின் விதிமுறைகளை மிகவும் தீவிரமாக கடைபிடியுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story