கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்காது - உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்


கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்காது - உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 April 2020 10:06 PM GMT (Updated: 2020-04-17T05:59:03+05:30)

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொல்கத்தா, 

எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். தவிரவும் பல்வேறு பாதிப்புகளை மதுபானங்கள் ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் உலக அளவில் பல நாடுகளிலும் மதுபானங்கள் குடித்தால், அது கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரோனா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளகளில் வெளியாகின. இதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. இதெல்லாம் கட்டுக்கதை என கூறி நிராகரிக்கிறது.

எந்த வகையிலும் ஆல்கஹால் (மதுபானங்கள்), கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து ஒருவரை பாதுகாக்காது என அது திட்டவட்டமாக கூறுகிறது. மேலும், மதுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மதுபானங்களை அருந்தினால், அது உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், வன்முறையில் ஈடுபட தூண்டும், மன நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

இது தொடர்பாக, பொது சுகாாரத்தின் ஒரு பகுதியாக உலக சுகாதார நிறுவனம், துணைவர்களுடன் இணைந்து உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டது.

ஆல்கஹால், கொரோனா வைரஸ் ஆகிய இரண்டையும் பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் ஆராய்ந்தது.

குறிப்பாக, அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள், கொரோனா வைரசை கொல்கிற வலிமையை கொண்டுள்ளதா என்றெல்லாம் ஆராயப்பட்டது.

அதன்முடிவில், கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அதிகமான வலிமை கொண்டுள்ள ஆல்கஹாலை குடித்தால் அது கொரோனா வைரசை கொல்லும் என்பது கட்டுக்கதை. இதில் உண்மை இல்லை.

* எந்த வகை மதுபானங்களை பருகினாலும், அவை பொதுவான ஆரோக்கியத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்.

* எந்த நேரத்திலும் பொதுமக்கள் மதுபானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற காலகட்டத்தில் மது பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story