இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 77 பேர் கொரோனாவுக்கு பலி - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 77 பேர் கொரோனாவுக்கு பலி - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 2 May 2020 4:45 AM IST (Updated: 2 May 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் 77 பேர் பலியாகி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இந்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை வரை 33,610 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று மாலை 35,365 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 24 மணி நேரத்துக்குள் இந்த வைரஸ் தொற்றால் 77 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,152 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 9,065 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும், 25,168 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் மராட்டியத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் அங்கு இந்த கொரோனா 459 பேரின் உயிரையும் காவு வாங்கி விட்டது.

குஜராத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்து செல்கிறது. மேலும் அங்கு இந்த வைரஸ் தொற்றால் சுமார் 4,400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தனது கோரப்பிடியால் 3,515 பேரை பாதிக்கச் செய்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 2,600-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சபட்சமாக ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால், மொத்தம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் 2,281 பேரும், ஆந்திராவில் 1,463 பேரும், தெலுங்கானாவில் 1,038 பேரும், மேற்கு வங்காளத்தில் 744 பேரும், கர்நாடகாவில் 589 பேரும், பஞ்சாபில் 585 பேரும், கேரளாவில் 497 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்றால் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story