இந்தியாவில் ஒரே நாளில் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று நாடு; முழுவதும் 37,776 பேர் பாதிப்பு
இந்தியாவில் ஊரடங்குக்கு மத்தியில் கொரோனா பாதிப்பு நேற்று உச்சம் தொட்டது. ஒரே நாளில் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,776 ஆக அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் உள்ள நாடுகளை கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் வல்லரசு நாடுகள்கூட விழிபிதுங்கி நிற்கின்றன. சமூக விலகல் ஒன்றைத் தவிர கொரோனாவை அழிக்க வேறு எந்தவொரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், ஊரடங்கை நம்பியே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கே ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கப்போகிறது. ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிக்கு ஏற்ப, அரசு எவ்வளவோ பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அதை நிறைவேற்றுவது மக்கள் கையில்தான் இருக்கிறது.
ஆனால் இன்னும் இந்த வைரசின் உண்மையான குணத்தை மக்கள் அறியவில்லை என்பதற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிடும் புள்ளி விவரம்தான் உதாரணம். ஒவ்வொரு நாளும் அந்த அமைச்சகம் வெளியிடும் விவரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்கு மத்தியில் கொரோனா நேற்று புதிய உச்சத்தை தொட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரம், இந்தியாவில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மட்டும் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக காட்டுகிறது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக 71 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,223 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே சற்று நிம்மதி அளிக்கும் விஷயம், அதில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கைதான். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10,018 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 37 ஆயிரம் பேரில் சுமார் 11,500 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நோக்கியும், டெல்லியில் 4 ஆயிரத்தை நோக்கியும் செல்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,757 ஆனது. இதனால் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த தமிழகம் 4-வது இடத்துக்கு சென்றது. ராஜஸ்தானில் 2,720 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,715 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 2,500-ஐ நெருங்கிவிட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 601 பேரும், கேரளாவில் 499 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர்.
Related Tags :
Next Story