இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது; 22,455 பேர் ‘டிஸ்சார்ஜ்’
புதிதாக 3,604 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் 22,455 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா, இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கிவிட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், நேற்று முன்தினம் காலை முதல் புதிதாக 3,604 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152-ல் இருந்து 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31.73 சதவீதம் பேர், அதாவது 22,455 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 46,008 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 24 மணி நேரத்துக்குள் கொரோனா 87 பேரை உயிரிழக்கவும் செய்துவிட்டது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பலியான 87 பேரில் 36 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் 20 பேரும், தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 6 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும், அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தலா ஒருவரையும் கொரோனா 24 மணி நேரத்துக்குள் பலி வாங்கி உள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியமே இருந்து வருகிறது. புதிதாக 716 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தமிழகம் வந்தது.
இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை(அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
பாதிப்பு-பலி
மராட்டியம்- பாதிப்பு 23,401 (பலி 868), தமிழ்நாடு- 8,718 (61), குஜராத்- 8,541 (513), டெல்லி- 7,233 (73), ராஜஸ்தான்- 3,988 (113), மத்திய பிரதேசம்- 3,785, (221), உத்தரபிரதேசம்- 3,573 (80), மேற்கு வங்காளம்- 2,063 (190), ஆந்திரா- 2,018 (45), பஞ்சாப்- 1,877 (31), தெலுங்கானா- 1,275 (30), ஜம்மு-காஷ்மீர் 879 (10), கர்நாடகா- 862 (31), பீகார்- 747 (6), அரியானா- 730 (11), கேரளா- 519 (4).
ஒடிசா- 414 (3), சண்டிகார்- 174 (2), ஜார்கண்ட்- 160, திரிபுரா- 152, உத்தரகாண்ட்- 68 (1), அசாம்- 65 (2), சத்தீஸ்கார்- 55, இமாசலபிரதேசம்-55 (2), லடாக்-42, அந்தமான்-நிகோபர் தீவு- 33, மேகாலயா 13 (1), புதுச்சேரி- 12, கோவா-7, மணிப்பூர்-2, தாதர்-நாகர் ஹாவேலி- 1, மிசோரம்-1, அருணாசல பிரதேசம்-1.
Related Tags :
Next Story