இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,649 ஆக உயர்வு; மராட்டியத்தில் மட்டும் 1,019 பேர் சாவு
கொரோனாவால் புதிதாக 100 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. இதில் மராட்டியத்தில் மட்டும் 1,019 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் இந்த 24 மணி நேரத்துக்குள் 3,967 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், புதிதாக 100 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 27,524 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10,108 பேரும், குஜராத்தில் 9,591 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 8,470 ஆக உள்ளது.
ராஜஸ்தானில் 4,534 பேரையும், மத்திய பிரதேசத்தில் 4,426 பேரையும், உத்தரபிரதேசத்தில் 3,902 பேரையும், மேற்கு வங்காளத்தில் 2,377 பேரையும், ஆந்திராவில் 2,205 பேரையும், பஞ்சாபில் 1,935 பேரையும், தெலுங்கானாவில் 1,414 பேரையும் , பீகாரில் 994 பேரையும், கர்நாடகாவில் 987 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 983 பேரையும், அரியானாவில் 818 பேரையும், ஒடிசாவில் 611 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை வரையில் அங்கு 560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மற்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200-க்கு கீழே உள்ளது.
இந்தியாவில் 6 மாநிலங்களில் கொரோனா நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிரிழக்கச் செய்துள்ளது.
அதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டும் 1,019 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். குஜராத்தில் 586 பேரும், மத்திய பிரதேசத்தில் 237 பேரும், மேற்கு வங்காளத்தில் 215 பேரும், ராஜஸ்தானில் 125 பேரும், டெல்லியில் 115 பேரும் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களில் 100-க்கு கீழே இருக்கிறது.
Related Tags :
Next Story