டெல்லியில் 20 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் 20 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 May 2020 6:38 PM IST (Updated: 18 May 2020 9:32 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 20 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். அதில், டெல்லியில் 20 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

பேருந்துக்குள் ஏறும் முன்பு பயணிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார். டேக்ஸி, வாடகைக் கார்களில் 2 பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, டெல்லியில் தடை செய்யப்பட்டிருந்த கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளின் போது சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தற்போது டெல்லியில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் காய்கறி சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடைகளுக்கு வழங்கப்பட்ட எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் முதலியவற்றை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

Next Story