ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று: சீனாவை முந்தியது பாகிஸ்தான்


ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று: சீனாவை முந்தியது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 5 Jun 2020 1:00 AM IST (Updated: 5 Jun 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் சீனாவை பாகிஸ்தான் முந்தியுள்ளது.

இஸ்லாமாபாத், 

உலகையே அச்சுறுத்தி பலரை காவு வாங்கி வரும் கொடூர கொரோனா தோன்றிய இடமாக சீனா கருதப்படுகிறது. அங்கு இதுவரை 84 ஆயிரத்து 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் தற்போது முந்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,688 ஆகும். ஒரே நாளில் இத்தனை பேர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 17-வது இடத்தையும், சீனா 18-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த தகவலை ‘ஜான் ஹாப்கின்ஸ்’ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1,770 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 30 ஆயிரத்து 128 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனாவால் சிந்து மாகாணத்தில் 32,910 பேரும், பஞ்சாபில் 31,104 பேரும், கைபர் பக்துன்வாவில் 11 ஆயிரத்து 373 பேரும், பலுசிஸ்தானில் 5,224 பேரும், இஸ்லாமாபாத்தில் 3,544 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 285 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பாகிஸ்தானின் திட்டத்துறை மந்திரி ஆசாத் உமர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


Next Story