இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு


இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 July 2020 4:45 AM IST (Updated: 2 July 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்து இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தாலும், பலியாவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த (ஜூன்) மாதம் 11-ந் தேதியில் இருந்து தினந்தோறும் குறைந்தபட்சம் 300 பேரின் உயிரையாவது கொரோனா காவு வாங்கி வருகிறது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி 24 மணி நேரத்தில் 2,003 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் மராட்டியம் மற்றும் டெல்லியில் விடுபட்டிருந்த பலி எண்ணிக்கையை அந்த நாளில் சேர்த்ததால்தான் இந்த உயர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை தவிர்த்து மற்ற நாட்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 500-க்கு உள்ளேயே இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 245 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 62 பேரும், தமிழகத்தில் 60 பேரும், உத்தரபிரதேசத்தில் 25 பேரும், கர்நாடகாவில் 20 பேரும், குஜராத்தில் 19 பேரும், மேற்குவங்காளத்தில் 15 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 8 பேரும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தலா 7 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் தலா 6 பேரும், பீகாரில் 5 பேரும், அரியானாவில் 4 பேரும், கேரளா, ஒடிசா, புதுச்சேரி மற்றும் உத்தரகாண்டில் தலா 2 பேரும், அசாம் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா ஒருவர் என ஒரே நாளில் 507 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதில் 70 சதவீதம் பேர் மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக உயிரிழந்த 507 பேருடன் சேர்ந்து இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்த உயிரிழப்பில் 45 சதவீதம் மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டும் 7,855 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-

டெல்லி (2,742), குஜராத் (1,846), தமிழ்நாடு (1,264), உத்தரபிரதேசம் (697), மேற்குவங்காளம் (668), மத்தியபிரதேசம் (572), ராஜஸ்தான் (413), தெலுங்கானா (260), கர்நாடகா (246), அரியானா (236), ஆந்திரா (187), பஞ்சாப் (144), ஜம்மு காஷ்மீர் (101), பீகார் (67), உத்தரகாண்ட் (41), ஒடிசா (25), கேரளா (24), ஜார்கண்ட் (15), சத்தீஸ்கார் (13), அசாம் (12), புதுச்சேரி (12), இமாசலபிரதேசம் (10), சண்டிகார் (6), கோவா (3), மேகாலயா (1), லடாக் (1), அருணாசலபிரதேசம் (1), திரிபுரா (1).

மேலும் ஒரே நாளில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 94 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 87 ஆயிரத்து 360 பேர் பாதிப்புடன் 3-வது இடத்தில் டெல்லி இருக்கிறது.

10 ஆயிரத்துக்கும் அதிக பாதிப்புடன் இதற்கு அடுத்த இடங்களில் குஜராத், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, அரியானா, மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 32 ஆயிரத்து 557 பேருக்கும், குறைந்தபட்சமாக பீகாரில் 10 ஆயிரத்து 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக அசாம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரகாண்ட், சத்தீஸ்கார், ஜார்கண்ட், திரிபுரா, கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை உள்ளன. இதில் அசாமில் உச்சபட்சமாக பாதிப்பு 8,227 ஆகவும், மணிப்பூரில் 1,234 ஆகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story