கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி:‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு


கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி:‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2020 11:45 PM GMT (Updated: 3 July 2020 10:50 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலிகளையும், ஆயிரக்கணக்கில் பாதிப்பையும் நிகழ்த்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய-மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களும் மூடியே கிடக்கின்றன. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்தவகையில் மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை வருகிற 26-ந்தேதி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

இதைப்போல என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் வருகிற 18 முதல் 23-ந்தேதி வரையும், ஐ.ஐ.டி.களில் சேர்வதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆகஸ்டு 23-ந்தேதியும் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.

இந்த தேர்வுகளுக்காக சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இந்த கொரோனாவுக்கு மத்தியிலும் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.

ஆனால் நாடு முழுவதும் நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாலும், தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாகவும் இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் நிலவி வந்தது. எனவே இது தொடர்பாக தெளிவான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே இந்த தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களின் பெற்றோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே தேர்வு மையங்கள் இல்லை என்பதாலும், சர்வதேச பயணங்கள் தடை செய்யப்பட்டு உள்ளதாலும் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த நுழைவுத்தேர்வுகள் நடத்துவதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் நாட்டின் தற்போதைய சூழலை ஆய்வு செய்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேற்படி நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு, ஜே.இ.இ. மற்றும் நீட் நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்படி ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ந்தேதிக்கு இடையில் நடத்தப்படும். ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27-ந்தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதியும் நடத்தப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story