கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன


கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன
x
தினத்தந்தி 6 Aug 2020 4:04 PM GMT (Updated: 6 Aug 2020 4:04 PM GMT)

கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொச்சி,

கேரளாவின் கொச்சி நகரில் கொளஞ்சேரி என்ற பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.  அவர் தனது நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார்.  ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டவரான அவரை, மனோஜ் (வயது 46) என்பவர் புகையிலை வாங்கி தருகிறேன் என கூறி அருகிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன்பின்னர் அந்த மூதாட்டி கற்பழிக்கப்பட்டு உள்ளார்.  இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் முகமது சபி (வயது 50) என்பவரும் ஈடுபட்டு உள்ளார்.  சம்பவம் நடந்தபொழுது, மனோஜின் தாயார் ஓமனா (வயது 66) வீட்டில் இருந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் மூதாட்டி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.  அவரது இனப்பெருக்க உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.  சம்பவம் அறிந்து அருகே வசிப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உள்ளது.

எனினும், தீவிர சிகிச்சை நிலையிலேயே அவர் உள்ளார்.  அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனையடுத்து, போலீசார் குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்தனர்.  ஓமனா நடந்த விசயங்களை ஒப்பு கொண்டுள்ளார்.  விசாரணை தொடர்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ஓமனா அந்த பகுதியில் பாலியல் தொழிலாளர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளார்.  குடிப்பழக்கம் கொண்ட மனோஜ், வீட்டில் இதுபோன்று நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓமனாவிடம் சண்டை போடுவது வழக்கம்.  சம்பவம் நடந்த அன்று, லாரி டிரைவருக்கு ஏற்பாடு செய்த பெண் வரவில்லை.  இதனால், ஞாபக மறதி கொண்ட மூதாட்டியை பேசி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்பு சபி அவரை கற்பழித்து உள்ளார்.  தனது வீட்டில் மயங்கி கிடந்த அவரை கண்ட மனோஜ் கடுமையாக தாக்கியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்ற சபியை போலீசார் படை சுற்றி வளைத்து, உள்ளூர்வாசிகள் உதவியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  இந்த 3 பேரும் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.  எனினும், மூதாட்டி தொடர் சிகிச்சையிலேயே உள்ளார்.  இதுபற்றி மகளிர் ஆணையமும் வழக்கு பதிவு செய்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

Next Story