நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு; ரியா சக்ரபோர்த்தியின் மேலாளரிடம் அமலாக்க துறை 9 மணிநேரம் விசாரணை


நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு; ரியா சக்ரபோர்த்தியின் மேலாளரிடம் அமலாக்க துறை 9 மணிநேரம் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2020 1:40 AM GMT (Updated: 7 Aug 2020 1:40 AM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் ரியா சக்ரபோர்த்தியின் மேலாளரான சாமுவேல் மிராண்டாவிடம் அமலாக்க துறை அதிகாரிகள் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

பாட்னா,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது 34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார்.

சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார். அவர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சில நாட்கள் முன்பு வரை அவருடன் பாந்திராவில் ஒரே வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது.

சுஷாந்தின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மத்திய அரசும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுஷாந்த் வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி, அவரது நண்பர் சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ள ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இதனை தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியின் மேலாளரான சாமுவேல் மிராண்டா மும்பையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு நேற்று விசாரணைக்காக சென்றார். அவரிடம் அதிகாரிகள் நேற்று இரவு வரை விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணை 9 மணிநேரம் நடந்தது.  அதன்பின்னர் அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story