அரசியலில் தனிப்பட்ட பகை உணர்வு இருக்கக் கூடாது-ராஜஸ்தான் திரும்பிய சச்சின் பைலட் பேட்டி

அரசியலில் தனிப்பட்ட பகை உணர்வு இருக்கக் கூடாது என்று ராஜஸ்தான் திரும்பிய பின் சச்சின் பைலட் கூறினார்.
ஜெய்ப்பூர், -
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் பா.ஜ.க. ஆளும் அரியானா மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கினார்.
இதன் காரணமாக, துணை முதல்-மந்திரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அசோக் கெலாட் அரசு கவிழும் சூழல் இருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
வருகிற 14-ந்தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தானில் நீடித்து வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு சச்சின் பைலட் நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு திரும்பினார். ஜெய்ப்பூரில் உள்ள சச்சின் பைலட் வீடு முன்பு அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தான் கட்சிக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும், கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க டெல்லி சென்றதாகவும் கூறினார். மேலும் இந்த சந்திப்பின் போது தான் எந்த பதவியையும் கோரவில்லை என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.
அதே சமயம் தனக்கு எதிரான அறிக்கைகள் குறித்து அதிர்ச்சியடைவதாக அவர் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘எனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளால் நான் சோகமாக இருக்கிறேன். அதிர்ச்சியடைகிறேன். காயப்படுகிறேன். அரசியலில் தனிப்பட்ட பகை உணர்வு இருக்கக் கூடாது. அதேபோல் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது’’ என கூறினார்.
Related Tags :
Next Story






