இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறது - மத்திய அரசு அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறது - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2020 12:15 AM GMT (Updated: 25 Aug 2020 10:21 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பரிசோதனைகளை அதிகரித்துள்ள நிலையில் ஒரே நாளில் 66,500 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெயரை கேட்டாலே அலறுகிற நிலை இனி இந்தியாவில் இருக்காது என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, முதன் முதலாக கடந்த ஜனவரி மாதம், இந்தியாவில் கேரள மாநிலத்தில் வெளிப்படத்தொடங்கியது.

இந்த 8 மாத காலத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கால்பாதித்து பரவி வருகிறது. தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் பரிசோதனைகளை அதிகரித்துக்கொண்டே வந்தன.

10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிற அளவுக்கு, பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கி மாநிலங்களும், யூனியன்பிரதேசங்களும் பயணித்தன. அதற்கு ஏற்ற வகையில் கடந்த ஜனவரியில் ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் மட்டுமே புனே நகரில் இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 1,524 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

அதன் பயனாக கடந்த 21-ந் தேதி அன்று 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுதான் ஒரே நாளில் இந்தியாவில் அதிகபட்சம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை ஆகும். தொடர்ந்து 8 லட்சம், 9 லட்சம் என்கிற அளவுக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை பரிசோதனைகளின் எண்ணிக்கை உயர்ந்தபோது, தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. அந்த நிலை இப்போது மாறி வருகிறது. கடந்த சில நாட்களில் தொடர்ந்து பரிசோதனைகள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் 9 லட்சத்து 25 ஆயிரத்து 383 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 60 ஆயிரத்து 975 தான்.

கடந்த 22-ந் தேதி 69 ஆயிரத்து 874, 23-ந் தேதி, 69 ஆயிரத்து 239, 24-ந் தேதி 61 ஆயிரத்து 408, நேற்று 60 ஆயிரத்து 975 என தொடர்ந்து தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் ஏற்பட்டு வருகிற இறங்குமுகத்துக்கு சான்றாக அமைகிறது.

இதுபற்றி மத்திய அரசின் சார்பில், சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆகஸ்டு முதல் வாரத்தில் ஒருவார கால தொற்றுபாதிப்பு சராசரி என்பது 11 சதவீதமாக இருந்தது. தற்போது அது 8 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. ஆனால் தொற்று பாதிப்பில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவில் முதல் முறையாக நேற்று கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 6,423 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அது மட்டுமல்ல, சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் நோயின் கடுமையான பிடியில் இருப்போரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இது நோயின் கடுமை குறைகிறது என்பதற்கானஅறிகுறியாக அமைகிறது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 2.70 சதவீதத்தினர் மட்டுமே ஆக்சிஜன்ஆதரவின்கீழ் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 1.92 சதவீதத்தினர்தான் இருக்கிறார்கள். வென்டிலேட்டரில் 0.29 சதவீதத்தினர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும், குணம் அடைவதில் உலகளவில் பிரேசிலை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

கொரோனாவில் இருந்து இதுவரை உலகளவில் 1 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரத்து 327 பேர் மீண்டுள்ளனர். பிரேசிலில் 36.22 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 29.76 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 31.67 லட்சமாக இருந்தபோதும், மீண்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 4,585 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில், கொரோனாவில் இருந்து 66 ஆயிரத்து 550 பேர் குணம் அடைந்தனர். மராட்டியத்தில் 14 ஆயிரத்து 219 பேரும், ஆந்திராவில் 8,741 பேரும், கர்நாடகத்தில் 8,061 பேரும், தமிழகத்தில் 6,129 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,494 பேரும் கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தி குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதமும் 75.92 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை வெல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதின் பின்னணி பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பலி விகிதம் சீராக குறைந்து வந்து 1.84 சதவீதம் ஆகி உள்ளது. கடந்த 25 நாட்களில் மீண்டவர்கள் எண்ணிக்கை என்பது 100 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரை காட்டிலும் கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3.41 மடங்கு அதிகம்” என குறிப்பிட்டது.

அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா பராமரிப்பு மையங்கள், சுகாதார மையங் கள், ஆஸ்பத்திரிகள் என்ற 3 அடுக்கு கொரோனா சிகிச்சை அமைப்பு, கொரோனா நோயாளிகள் அதில் இருந்து விரைவாக மீள்வதற்கு பக்க பலமாக உள்ளன.

இனி வரும் நாட்களிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகரித்தாலும் தொற்று பாதிப்பு குறையும், உயிர்ப்பலியும் குறையும், குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Next Story