இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 6 Sept 2020 5:09 AM IST (Updated: 6 Sept 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து விட்டது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் இன்று மக்களின் சிந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஒரே பெயர், கொரோனா. மனுக்குலத்தின் அன்றாட நிகழ்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்த பெருந்தொற்று அரசுகளின் இயக்கத்தையும் தடுத்தாள்கிறது. கொத்துக்கொத்தான மரணங்களும், கும்பல் கும்பலான புதிய நோயாளிகளும் அன்றாட நிகழ்வாகிப்போனதால், மருத்துவ துறையே ஆட்டம் காண்கிறது. கண்ணுக்குத்தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போரிட மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லாமல் வல்லரசுகளும் நிராயுதபாணிகளாகி இருக்கின்றன.

இப்படி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவும் இடம்பெற்று உள்ளது.

இங்கு தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருந்தாலும் இந்த கொடிய வைரசை தடுக்க முடியவில்லை. தினசரி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 86,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அதிக அளவாக இந்த பாதிப்பு அமைந்து உள்ளது.

இந்த புதிய நோயாளிகளையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கடைசி 10 லட்சம் நோயாளிகள் மட்டும் கடந்த 2 வாரங்களில் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியத்தில் மட்டுமே 8,63,062 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அடுத்ததாக தமிழகம் 4,79,506 நோயாளிகளையும், ஆந்திரா 4,51,827 நோயாளிகளையும் கொண்டுள்ளன.

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள கொரோனா பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 1,089 புதிய சாவு எண்ணிக்கையுடன் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடத்தில் (25,964) உள்ளது. அடுத்ததாக தமிழகம் (7,687) மற்றும் கர்நாடகா (6,170) மாநிலங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர் மற்றும் பலியானவர் எண்ணிக்கையில் முறையே 46 மற்றும் 52 சதவீதத்தினர் மராட்டியம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே தொற்றுக்கு எதிராக பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இந்த மாநிலங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 70 ஆயிரத்து 72 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்த மீண்டவர் எண்ணிக்கையில் 5 மாநிலங்கள் மட்டுமே 60 சதவீதத்தினரை கொண்டுள்ளன. குறிப்பாக மராட்டியம் (21 சதவீதம்), தமிழகம் (12.63), ஆந்திரா (11.91), கர்நாடகா (8.82), உத்தரபிரதேசம் (6.14) ஆகிய மாநிலங்கள் அதிக குணமடைந்தவர் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

தற்போதைய நிலையில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 395 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 77.23 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.73 சதவீதமாகவும் இருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது. அந்தவகையில் நாடு முழுவதும் தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 59 ஆயிரத்து 346 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 491 ஆக அதிகரித்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.

Next Story