இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 லட்சத்தை கடந்தது; மீண்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 லட்சத்தை கடந்தது; மீண்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 Oct 2020 11:30 PM GMT (Updated: 7 Oct 2020 10:10 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 லட்சத்தை கடந்தது. மீண்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது.

புதுடெல்லி,

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோசமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (77.30 லட்சம்) தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை இந்தியா வகிக்கிறது. இங்கு நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 72 ஆயிரத்து 49 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியானது. 5 நாட்களுக்கு பின்னர் நேற்று பாதிப்பு சற்றே அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் 11 லட்சத்து 99 ஆயிரத்து 857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் தொற்று அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நாட்டில் 8 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. நாட்டில் தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிகை 67 லட்சத்து 57 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடுவதற்கு 110 நாட்கள் ஆனது நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு 59 நாட்கள் ஆனது. 20 லட்சத்தை ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி கடந்தது. 23-ந் தேதி பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது. கடந்த மாதம் 5-ந் தேதி பாதிப்பு 40 லட்சம் கடந்தது. அடுத்த 11 நாளில் பாதிப்பு 50 லட்சம் தாண்டியது. மேலும் 12 நாளில் பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும்கூட, அதற்கு இணையாக கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆறுதல் அளிக்கும் அம்சமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 293 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதனால் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 57 லட்சத்து 44 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதமும் 85 சதவீதத்தை கடந்தது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 986 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். இவர்களில் 370 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். கர்நாடகத்தில் 91, மேற்கு வங்காளத்தில் 63, உத்தரபிரதேசத்தில் 61, டெல்லியில் 39, பஞ்சாப்பில் 38, ஆந்திராவில் 33, மத்தியபிரதேசத்திலும், கேரளாவிலும் தலா 25, சத்தீஷ்காரில் 23, அரியானாவிலும், அசாமிலும் தலா 18 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நாட்டில் கொரோனாவுக்கு இரையானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தில் (38 ஆயிரத்து 717) நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது. 3-ம் இடத்தில் கர்நாடகம் (9,461) உள்ளது. உத்தரபிரதேசம் (6,153), ஆந்திரா (6,052), டெல்லி (5,581), மேற்கு வங்காளம் (5,318) ஆகிய மாநிலங்கள் 5 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பை சந்தித்துள்ள மாநிலங்கள் ஆகும். இறப்புவிகிதம் 1.55 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் தற்சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 7 ஆயிரத்து 883 ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் இது 13.44 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. மொத்தத்தில் நேற்று கொரோனா தொற்று புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 10 ஆயிரம் அதிகம் என்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

Next Story