ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தடுப்பு காவலில் இருந்து விடுவிப்பு
ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story