கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் தேவை: வழிகாட்டும் விதிமுறைகள் வெளியீடு
கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கலைஞர்களுக்கு கொரோனா இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் 5-வது ஊரடங்கு தளர்வுகளில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும், ஒளி, ஒலி, ஒப்பனை, ஆடை அலங்கார குழுவினருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான எதிர்மறை சான்றிதழ் அவசியம் ஆகும்.
* பார்வையாளர்கள், புரவலர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.
* 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.
* கலாசார நிகழ்ச்சி நடைபெறும் அரங்கங்கள், நிகழ்ச்சிக்கு முன்பாகவும், பின்பாகவும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* அரங்கு வளாகத்துக்குள் முக கவசம் இன்றி யாருக்கும் அனுமதி கூடாது. அனைத்து கலைஞர்களும் வீட்டில் இருந்தே உணவு கொண்டு வர வேண்டும்.
* ஊழியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்.
* குளிர்சாதன அரங்கில் வெப்ப நிலை 24-30 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story