இந்தியா- வங்காளதேசம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு


இந்தியா- வங்காளதேசம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு
x
தினத்தந்தி 17 Oct 2020 5:18 PM GMT (Updated: 17 Oct 2020 5:18 PM GMT)

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை பின்பற்றி “ ஏர் பபிள்” என்ற முறையில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன

டாக்கா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், மெல்ல மெல்ல விமான சேவைகளை மீண்டும் பல்வேறு நாடுகள் அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. 

அந்த வகையில்,  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக  இந்தியாவுடனான விமான சேவையை அண்டை நாடான வங்காளதேசம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு  ஏர் பப்பிள் முறையில் விமான சேவையை மீண்டும் இயக்க வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை பின்பற்றி  “ ஏர் பபிள்” என்ற முறையில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த “ஏர் பபிள்” முறையைப் பின்பற்றி வரும் 28 ஆம் தேதி முதல் இந்தியா- வங்காளதேசம் இடையே வாரத்திற்கு  28 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

 ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, கோஏர் ஆகிய 5 இந்திய  விமான நிறுவனங்களும் பிமான் பங்காளதேசி ஏர்லைன்ஸ், யுஎஸ்- பங்களா ஏர்லைன்ஸ் மற்றும் நோவா ஏர் ஆகிய 3 வங்காளதேச விமன நிறுவனங்களும்  இருநடுகளுக்கும் இடையிலான விமான சேவையை துவங்க உள்ளன.  

டாக்கா- டெல்லி, டாக்கா - கொல்கத்தா, டாக்கா -சென்னை மற்றும் டாக்கா - மும்பை ஆகிய இடங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் 28 ஆம் தேதி முதல் சேவையை துவங்க உள்ளன.  இந்தியா - வங்காளதேச நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் விமான சேவையை தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு “ஏர் பப்பிள்” முறையில் இந்தியாவில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. 

Next Story