கமல்நாத்திற்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம்


கமல்நாத்திற்கு எதிரான  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை  நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 2 Nov 2020 10:31 AM GMT (Updated: 2 Nov 2020 10:31 AM GMT)

மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் இமார்டி தேவியைப் பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, கமல்நாத்திற்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திர பிரச்சாரகர் என்ற அந்தஸ்தை பறித்தது. 

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கமல்நாத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்க உங்களுக்கு(தேர்தல் ஆணையம்) யார்? அதிகாரம் கொடுத்தது எனவும் உச்ச நீதிமன்றம்  கேள்வி எழுப்பியது. நட்சத்திர பிரசாரகர் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டுமா? அல்லது கட்சி முடிவு செய்ய வேண்டுமா? என்று  தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்,  ஒரு கட்சியின் அரசியல் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று வரையறுக்கும் அதிகாரத்தை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் எனவும் காட்டமாக தெரிவித்தது.

Next Story