வயநாடு தொகுதி தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிரான மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி


வயநாடு தொகுதி தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிரான மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
x
தினத்தந்தி 3 Nov 2020 1:20 AM GMT (Updated: 3 Nov 2020 1:20 AM GMT)

வயநாடு தொகுதி தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்ததால், சரிதா நாயர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்திருந்த 2 மனுக்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிராகவும் சரிதா நாயர் கேரள ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். 

தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் புகார் மனுவாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறி கேரள ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சரிதா நாயர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு தொடர்பாக இருமுறை காணொலி விசாரணையில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், யாரும் பங்கேற்காததால், வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி வெற்றிக்கு எதிராக சரிதா நாயரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story