ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது - தமிழக அரசு திட்டவட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது -  தமிழக அரசு திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2020 2:23 PM IST (Updated: 16 Nov 2020 2:23 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான்” எனவும் தமிழக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story