இழுபறி நீடிப்பு: மத்திய அரசுடன் விவசாயிகள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இதனால் நாளை (சனிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
புதுடெல்லி,
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நேற்று 8-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு கடந்த 1-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
எனவே சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் இருக்கும் கவலைகளை மத்திய மந்திரிகள் கேட்டறிந்தனர். பின்னர் இந்த கவலைகள் மற்றும் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் அந்த சட்டங்களில் உள்ள ஓட்டைகள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய விவசாயிகள், மந்திரிகளின் உறுதிப்பாட்டை ஏற்க மறுத்தனர்.
இதனால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததுடன், எந்தவித முடிவும் ஏற்படாமல் முடிவடைந்தது. எனவே நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை சுமார் 8 மணி நேரம் நீண்டது.
இதனால் பேச்சுவார்த்தைக்கு இடையே விவசாய பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு சார்பில் மதிய உணவு, தேநீர், தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை விவசாய பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இது அரசு தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, பஞ்சாப் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அமரிந்தர் சிங் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பதால், பல சாலைகளை போலீசார் மூடி வருகின்றனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் தேசிய நெடுஞ்சாலை 9 மற்றும் 24-ல் காசியாபாத் முதல் டெல்லி வரை மூடப்பட்டு இருக்கிறது. இதைப்போல தேசிய நெடுஞ்சாலை 1-ம் ஷானி மந்திர் அருகே அடைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் போர்க்கோலம் பூண்டுள்ள விவசாயிகளால் தலைநகர் முழுவதும் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித ஈகோவும் இல்லை எனவும், அவர்களது கவலைகளை பரிசீலிப்பதில் அரசு திறந்த மனதுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Related Tags :
Next Story