வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு - விவசாய அமைப்புகள் அறிவிப்பு


வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு - விவசாய அமைப்புகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2020 11:55 PM GMT (Updated: 19 Dec 2020 11:55 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 24 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியின் பல்வேறு எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டத்தால் டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், கடும் குளிருக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடுநிலையான குழு ஒன்றை அமைக்க பரிந்துரைத்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த பரிந்துரையை பெரும்பாலான விவசாய அமைப்புகள் நிராகரித்து உள்ளன. எனினும் ஒரு சில அமைப்புகள் இது குறித்து பரிசீலிக்கலாம் என அறிவித்து இருந்தன. இந்த நிலையில் தங்கள் போராட்டத்துக்கு இதுவரை எந்த வித தீர்வும் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைப்புகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

இது குறித்து விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான சிவகுமார் கக்கா கூறுகையில், ‘அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக எங்கள் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்துள்ள அந்த கமிட்டியில் நாங்கள் இடம்பெறுவோமோ என்பது குறித்து அடுத்த 2-3 நாட்களில் முடிவு எடுப்போம். மேலும் இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனையும் கேட்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான பல்பிர் சிங் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை. நீண்ட காலம் இங்கு தங்குவதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் உரிமைக்காகவே இங்கே கூடியிருக்கிறோம். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஓரிரு நாளில் முடிவை அறிவிப்போம்’ என்று கூறினார்.

டெல்லியில் நடந்து வரும் இந்த நீண்ட போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்படும் என விவசாய அமைப்புகள் தெரிவித்தன.

Next Story