மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த மம்தா தவறிவிட்டார் - அமித்ஷா


மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த மம்தா தவறிவிட்டார் - அமித்ஷா
x
தினத்தந்தி 20 Dec 2020 11:30 PM GMT (Updated: 2020-12-21T01:15:35+05:30)

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த மம்தா தவறிவிட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.

கொல்கத்தா, 

மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக மேற்கு வங்காளத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக நேற்று அமித்ஷா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

போல்பூர் நகருக்கு சென்ற அமித்ஷா, அங்கு பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார். திறந்த ஜீப்பில் அவர் ஊர்வலமாக சென்றார். அதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைந்த அமித்ஷா, “என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீதான கோபம்தான் இந்த ஆதரவுக்கு காரணம்” என்று பேசினார்.

ஊர்வலம் முடிந்த பின்னர், அமித்ஷா போல்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் ஜெ.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. அவரது பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு இதை செய்துள்ளது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், விதிமுறை புத்தகத்தை படித்து பார்க்கட்டும்.

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மம்தா பானர்ஜி தவறி விட்டார். அனைத்து துறைகளிலும் அவரது அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ‘வந்தேறி’ பிரச்சினையை மம்தா கிளப்புகிறார்.

அவர் சில விஷயங்களை மறந்து விட்டார். அவர் காங்கிரசில் இருந்தபோது, இந்திரா காந்தியை ‘வந்தேறி’ என்றுதான் சொன்னாரா? நரசிம்மராவையும் அப்படிச் சொன்னாரா?

ஒரு மாநில மக்கள், மற்ற மாநிலத்தில் அனுமதிக்கப்படாத நாட்டை அவர் உருவாக்க விரும்புகிறாரா? மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மண்ணின் மைந்தன்தான் முதல்-மந்திரி ஆவார்.

வங்காளதேசத்தினர் ஊடுருவலை மம்தா அரசால் தடுக்க முடியாது. பா.ஜனதாவால்தான் முடியும். விவசாயிகள் போராட்டத்தை அவர் ஆதரிக்கிறார். ஆனால், விவசாயிகளுக்கான மத்திய அரசு திட்டங்களை தடுக்கிறார். இதுவா கூட்டாட்சி முறை?

கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும். கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியவுடன், இதுகுறித்து விவாதிப்போம்.

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், திங்கட்கிழமையோ அல்லது செவ்வாய்க்கிழமையோ பேச்சுவார்த்தை நடத்துவார்” என்று அமித்ஷா கூறினார்.

முன்னதாக, பிர்பும் மாவட்டம் சாந்திநிகேதனுக்கு அமித்ஷா சென்றார். அங்குள்ள பாசுதேவ் தாஸ் பால் என்ற நாட்டுப்புற பாடகரின் வீட்டில், தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

பாசுதேவ் தாஸ் பால் மற்றும் அவருடைய குடும்பத்தினர், நாட்டுப்புற பாடல் பாடியதை அமித்ஷா ரசித்துக் கேட்டார்.

பின்னர், சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு அமித்ஷா சென்றார். அங்குள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாகூர் வாழ்ந்த உத்தராயன் வளாகத்தை சுற்றி பார்த்தார். பிரார்த்தனை கூடத்தை பார்வையிட்டார்.

பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கீத் பவனில் அமித்ஷா முன்னிலையில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அவர்களுடன் அமித்ஷா உரையாடினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் வித்யுத் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர்களையும் சந்தித்து பேசினார்.


Next Story