‘சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்’ - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2021 11:30 PM GMT (Updated: 6 Jan 2021 8:12 PM GMT)

சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில் ஒரு சில விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய தோமர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால்தான் சட்டங்களை ஆதரித்து எங்களை சந்திக்க வரும் விவசாயிகளுடன் நாங்கள் பேசுகிறோம். அதைப்போல எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறோம்’ என்றார்.

நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் இந்த சட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

வேளாண் சீர்திருத்தங்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இந்த விவகாரத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இதற்காக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

Next Story