கட்சி விரோத நடவடிக்கை; திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் எம்.எல்.ஏ.


கட்சி விரோத நடவடிக்கை; திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 22 Jan 2021 4:02 PM GMT (Updated: 22 Jan 2021 4:02 PM GMT)

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.  இதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

திரிணாமுல் காங்கிரசியில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வைஷாலி டால்மியா.  பள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவர், கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வந்துள்ளார்.

கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த நிலையில், கட்சியில் இருந்து அவரை நீக்கியுள்ளனர்.  இதுபற்றி அக்கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், கட்சியின் ஒழுங்கு குழு கூட்டம் இன்று கூடி ஆலோசனை நடத்தியதில், டால்மியாவை கட்சியில் இருந்து வெளியேற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்காள வனத்துறை மந்திரி ராஜீப் பானர்ஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்த சில மணிநேரங்களில் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.  ராஜீப் ராஜினாமா செய்த பின்னர், கட்சியின் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து டால்மியா பேசியுள்ளார்.  தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story