72வது குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய முப்படைகளின் அணிவகுப்பு


72வது குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய முப்படைகளின் அணிவகுப்பு
x
தினத்தந்தி 26 Jan 2021 7:12 AM GMT (Updated: 2021-01-26T12:42:33+05:30)

72வது குடியரசு தின கொண்டாட்டத்தினையொட்டி, இந்தியாவின் ராணுவ பலத்தை முப்படைகளின் அணிவகுப்பு பறைசாற்றியது.

புதுடில்லி, 

இந்திய திருநாட்டின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில், குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. 

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், அணிவகுப்பு கமாண்டராக, லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா தலைமையேற்று சென்றார். இந்திய விமானப்படையில் போர் விமானங்களில் பணியாற்றும் மூன்று பெண் விமானிகளில் ஒருவரான பாவனா காந்த், இந்திய விமானப்படையின் அணிவகுப்பில் அணிவகுத்து சென்றார். 'ஸ்வர்நீம் விஜய் வர்ஷ்' என்ற தலைப்பில், இந்திய கடற்படை வீரர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர். 

துணை கமாண்டர் கன்ஷியாம் சிங் தலைமையில், எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டக படைப்பிரிவு அணிவகுப்பில் பங்கேற்றனர்.1984 ல் உருவாக்கப்பட்ட, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர். 

குடியரசு தின அணிவகுப்பில், டிஆர்டிஓவின் இரண்டு குழுக்கள் பங்கேற்றன. இந்த அமைப்பு உருவாக்கிய, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து கிளம்பும் இலகு ரக விமானம் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகியவை பங்கேற்றன.  


முதன்முறை இந்த ஆண்டு, முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவத்தினர் பங்கேற்றறனர். ஷனூர் ஷாவன் தலைமையில் 122 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில், 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றது. கேப்டன் உவாம்ரூல் ஜமன் தலைமையில் இந்த ஏவுகணை இடம்பெற்றது.

உலகின் அதிநவீன ராக்கெட் அமைப்புகளில் ஒன்றான, பினாகா மல்டி லாஞ்சர் ராக்கெட் அணிவகுப்பில் இடம்பெற்றது. முற்றிலும், தானியங்கி முறையில் செயல்படும் இந்த ராக்கெட்,குறைந்த நேரத்தில் அதிகளவு பகுதிகளில் வெடிபொருட்களை வீசும் திறன்பெற்றது. 

இந்திய கடற்படையின், இசைக்குழுவினர் ' ஜெய் பார்தி' பாடலுக்கு இசையமைத்தபடி, அணிவகுப்பில் அணிவகுத்து சென்றனர்.நவீன ரேடார் மற்றும் டிஜிட்டல் முறையில் வெடிபொருட்களை கட்டுப்படுத்தும் அமைப்பை கொண்ட ஷில்கா ஆயுத அமைப்பு, கேப்டன் பீரதி சவுத்ரி தலைமையில் அணிவகுத்து சென்றது. குடியரசு தின அணிவகுப்பில், ராணுவம் சார்பில் பங்கெடுத்த ஒரே பெண் அதிகாரி ஆவர்.  இந்திய ராணுவத்தின் முக்கிய பங்காற்றும் டி-90 பீஷ்மா டாங்க் அணிவகுப்பில் பங்கேற்றது. கேப்ன் கரன்வீர் சிங் பங்கு, தலைமையில், இந்த டாங்க் அணிவகுத்து சென்றது, மிக்ரகம் மற்றும் சுபோய் போர் விமான அணிவகுப்பும் நடந்தது. 900 கிலோ மீட்டர் வேகத்தில் அதிநவீன ரபேல் போர் விமானம் விண்ணில் பறந்தது. ரபேல் விமானத்துடன் ஜாகுவார் ரக விமானங்கள் பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 72-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மூவர்ண பலூன்கள் விண்ணில் பறக்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றன.

Next Story