இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு


இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 8:36 AM GMT (Updated: 2 Feb 2021 8:36 AM GMT)

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த ஜனவரி 29ந்தேதி மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், 4 கார்கள் சேதமடைந்தன.

இதன் எதிரொலியாக, அப்பகுதியில் உள்ள சாலைகள்  மூடப்பட்டன.  தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.  சி.சி.டி.வி. காட்சிகள் ஆராயப்பட்டன.  சம்பவம் நடந்த இடத்தில் பகுதியளவு எரிந்த நிலையில் கைக்குட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கான முகவரியிட்டு கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.  அதில் உள்ள கைரேகை பதிவுகளை தடயவியல் குழு ஆய்வு செய்து வருகிறது.

தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டு விடாமல் தவிர்க்க அனைத்து விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடம் விஜய் சவுக் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது.  சம்பவம் நடந்தபொழுது, விஜய் சவுக் பகுதியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

டெல்லி போலீசின் சிறப்பு படை பிரிவு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தியது.  இதில், அம்மோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதனால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுவே ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருக்குமெனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.  பெரிய சதி திட்டத்திற்கான சோதனையாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.

இந்த குண்டுவெடிப்புபற்றி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறும்பொழுது, சம்பவ பகுதியில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  இந்திய மற்றும் இஸ்ரேல் நாட்டு உயர் மட்டத்திலான அதிகாரிகள் இடையே முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இஸ்ரேலிய தூதரகம் மீது குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது எங்களுடைய உறுதியான கணிப்பு.  தாக்குதல் நடந்தபொழுது, இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் முழு நடைமுறைக்கு வந்ததற்கான 29வது ஆண்டு தினமும் கொண்டாடப்பட்டது.

ஆகவே, அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.  கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் தூதரகத்திற்கு சற்று தொலைவில் இஸ்ரேல் நாட்டு தூதர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தது.  அதனுடன் இந்த தாக்குதல் தொடர்பு கொண்டிருக்கலாம்.  இந்த தாக்குதல் நடந்த விதம் அந்த வகையை சேர்ந்த ஒன்றாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்து ஒரு வாரத்திற்குள் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்விவகார அமைச்சகம் ஒப்படைத்து உள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story