தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை + "||" + Federal consultation with states on corona spread increase

கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கடந்த 3 நாட்களாக நாட்டில் தினமும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகம், தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,333 பேரும், கேரளாவில் 3,671 பேரும், பஞ்சாப்பில் 622 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 வாரங்களில் மராட்டியத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 449-ல் இருந்து 68 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அதன் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த விரும்பியது.

மத்திய அரசு ஆலோசனை

மத்திய அரசின் சார்பில் மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று காணொலி காட்சி வழியாக நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மராட்டியம், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலங்களில் கொரோனாவின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கக்காட்சி காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆலோசனையை மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா நடத்தினார்.

கடுமையான அபராதம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்கள், கொரோனா தொற்று பரவலை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்து, கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்ற வைக்கவும் இருப்பதாக தெரிவித்தனர். கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்களுடன் நெருக்கமாக மதிப்பாய்வு செய்ய இருப்பதாகவும் கூறினர். சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்கள்படி பிற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் எடுத்து கூறினர்.

மாநிலங்கள் கொரோனா பரவலை கொண்டிருப்பதில் தொடர்ச்சியான கடுமையான விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும் என்று ராஜீவ் கவுபா வலியுறுத்தினார். கடந்த ஆண்டு கூட்டாக உழைத்ததின் மூலம் கிடைத்த பலன்களை இழந்து விடக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

சுகாதார அமைச்சகம் அறிக்கை

இந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், தங்கள் பாதுகாப்பு அம்சங்களை குறைக்கக்கூடாது. கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பரவக்கூடிய நிகழ்வுகள் தொடர்பாக திறமையான கண்காணிப்பு உத்திகளை பின்பற்ற வேண்டும் என்று அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.

* பயனுள்ள பரிசோதனைகளை மேற்கொள்ளவும், விரிவான கண்காணிப்பு செய்யவும், வைரஸ் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தவும், நெருங்கிய தொடர்புகளையும் விரைவாக தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

* பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை போடவும், ஆரம்ப கால தீவிர பரவல் பகுதிகளை கண்டறியவும், கொரோனா வைரஸ் விகார பிறழ்வுகளை கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

* சோதனைகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளை அதிகரிக்கவும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

* அதிகமாக புதிய பாதிப்புகளை கொண்ட மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா
கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. நாகையில், கொரோனாவுக்கு 3 பேர் பலி டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று
நாகையில், கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. பஸ்களில் மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்வதை அதிகாரிகள் கண்காணிப்பு கூட்டநெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்கம்
பஸ்களில் மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
4. வேதாரண்யம் பகுதி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு
வேதாரண்யம் பகுதி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தடுப்பூசி இல்லை என ஊழியர்கள் கூறியதால் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை