இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை


இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 28 Feb 2021 12:56 AM GMT (Updated: 28 Feb 2021 12:56 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

புதுடெல்லி, 

உலகளவில் அமெரிக்காதான் அதிகபட்ச கொரோனா பாதிப்பையும், உயிர்ப்பலியையும் ஒருசேர சந்தித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாவது மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடு என்ற போதிலும், உயிர்ப்பலியை கட்டுக்குள் வைத்து வருகிறது. அந்த வகையில் உயிர்ப்பலியில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோவை தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.

நமது நாட்டில் நல்ல சுகாதார உள்கட்டமைப்பும், தரமான சிகிச்சை வசதியும் இருப்பதால் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 25-ந் தேதி 138 பேர், 26-ந் தேதி 120 பேர் பலியான நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 113 ஆக பதிவாகி இருக்கிறது.

வழக்கம்போல மராட்டியத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் (48 பேர்) உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 15 பேரும், கேரளாவில் 14 பேரும் இறந்து இருக்கிறார்கள்.

இதுவரை இந்தியாவில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம், 1.42 சதவீதமாக நீடிக்கிறது.

17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை

பலியில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடம் (52 ஆயிரத்து 41 பேர்) வகிக்கிறது. தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 3-ம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 12 ஆயிரத்து 320 பேர் பலியாகி உள்ளனர்.

அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், சண்டிகார், தத்ரா நகர் ஹவேலி டாமன் தியு, குஜராத், இமாசலபிரதேசம், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று பாதிப்பு அதிகரிப்பு

சராசரியாக தினசரி 10 ஆயிரம் பேருக்கு புதிய பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 16 ஆயிரத்தை தாண்டி புதிய பாதிப்புகள் பதிவாகின.

நேற்றும் இது நீடித்தது. 3-வது நாளான நேற்று 16 ஆயிரத்து 488 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. தொடர்ந்து மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பது தொடர்கிறது.

இதுவரை நாட்டில் கொரோனா பிடியில் சிக்கியோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 79 ஆயிரத்து 979 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா மீட்பு

பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற நல்ல சிகிச்சையின் விளைவாக கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சிக்கி மீள்வோர் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 179 பேர் மீண்டனர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 771 பேர் குணம் அடைந்திருப்பது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் 4,936 பேரும், கேரளாவில் 4,142 பேரும் மீண்டுள்ளனர்.

உலகளவில் இந்தியா கொரோனா மீட்பில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

கொரோனா மீட்பு விகிதத்தை பொறுத்தமட்டில், அது 97.14 சதவீதமாக உள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் ஏற்றம்

கொரோனாவில் இருந்து மீள்வதற்காக நாட்டின் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்றே ஏற்றம் கண்டு வருகிற போக்கை பார்க்க முடிகிறது.

1.5 லட்சத்துக்குள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்த நிலை, இப்போது மாறி இருக்கிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 986 பேர் சிகிச்சை பெற்றார்கள். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 1 லட்சத்து 59 ஆயிரத்து 590 ஆகி உள்ளது.

மராட்டியத்தில் 68 ஆயிரத்து 810 பேரும், கேரளாவில் 51 ஆயிரத்து 679 பேரும் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகின்றனர் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story