மம்தா பானர்ஜியுடன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு: மேற்கு வங்காள தேர்தலில் முழு ஆதரவு


மம்தா பானர்ஜியுடன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு: மேற்கு வங்காள தேர்தலில் முழு ஆதரவு
x
தினத்தந்தி 2 March 2021 8:01 AM IST (Updated: 2 March 2021 8:01 AM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்து தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

இந்நிலையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை, ராஷ்டிரிய ஜனதாதள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று சந்தித்து தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடன் பேசிய தேஜஸ்வி யாதவ், “முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். மத்தியில் ஆளும் பாஜக நாட்டை அழித்து வருகிறது. நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழிகள், இலக்கியங்களை காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரசுடன் கைகோத்து செயல்படுவோம். மேற்குவங்காளத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது” என்று அவர் கூறினார். 

அவரைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “நான் தேஜஸ்வியை வாழ்த்துகிறேன். அவர் ஒரு இளம் தலைவர். அவரை பீகார் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க பாஜக அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்தியது. ஆனால் அவர் மிக விரைவில் பீகாரை வழிநடத்துவார் என்பது எனக்குத் தெரியும். அந்த கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தை எனது தந்தையாக மதிக்கிறேன். அவரை விடுவித்தால், பாஜக இழப்பை சந்திக்க நேரிடும். இதன்காரணமாக அவர் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார். பாஜக எவ்வளவு கடினமாக ஊடகங்களை கட்டுப்படுத்தினாலும், எவ்வளவு பெரிய அளவில் பேசினாலும் நீங்கள் (பிஜேபி) இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

Next Story