தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 6 March 2021 9:33 PM GMT (Updated: 6 March 2021 9:33 PM GMT)

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி வெளியிட்டது. ஆனால் இந்த சட்டசபைகளை இதுவரை ஜனாதிபதியோ, கவர்னரோ கலைக்கவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ந் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்தல் நடைமுறைகள் மே 4-ந் தேதி நிறைவடையும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்த மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டசபையை கலைக்கும் அதிகாரம் கிடையாது.

5 மாநில சட்டசபைகளும் அவற்றின் பதவிக்காலம் முடிவடையும் வரை தொடருவதற்கான அதிகாரம் அரசமைப்பு சட்டத்தில் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொண்டு பிரசாரம் செய்வார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டம் 74-வது பிரிவின்படி, பிரதமரும், அமைச்சர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பங்கேற்க முடியாது. அவ்வாறு பங்கேற்பதாக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டும். எனவே, பிரதமர் பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் சில வழிகாட்டுதல்களுடன் 5 மாநிலங்களுக்கான தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள், சரிசமமான முறையில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது.


Next Story