கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடம்; ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
பல மடங்கு உயர்வு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதால் இந்த சிக்கல் உருவாகி இருக்கிறது.
அந்தவகையில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் மராட்டியத்தில் பல மடங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
11,141 பேர் பாதிப்புஅங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதைப்போல கேரளாவில் 2,100 பேரும், பஞ்சாப்பில் 1,043 பேரும் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மொத்தத்தில் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 599 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கியிருக்கின்றனர். இதில் 86.25 சதவீதம் பேர் மேற்படி 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில் தினசரி தொற்று தொடர்ந்து 3-வது நாளாக 18 ஆயிரத்துக்கு மேல் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
18 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லைஇவர்களையும் சேர்த்து நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து இருக்கிறது. இது உலக அளவில் 2-வது அதிகபட்சம் ஆகும்.
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 97 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். இதனால் மொத்த உயிரிழப்பு 1,57,853 ஆகியிருக்கிறது.
உயிரிழந்த 97 பேரில் 38 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 17 பேர் பஞ்சாப்பையும், 13 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். எனினும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனா மரணங்கள் இல்லை.
சிகிச்சை பெறுவோர் அதிகரிப்புஇது ஒருபுறம் இருக்க இந்தியாவில் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 82 ஆயிரத்து 798 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் மீண்டவர் சதவீதம் 96.91 ஆக சரிந்து விட்டது.
புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பதால், சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 1,88,747 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இது மொத்த பாதிப்பில் 1.68 சதவீதம் ஆகும்.
தொடர் ஆலோசனைவிடுமுறை தினமான நேற்று முன்தினமும் 5 லட்சத்து 37 ஆயிரத்து 764 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் நாடு மேற்கொண்டுள்ள மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 22 கோடியே 19 லட்சத்து 68 ஆயிரத்து 271 ஆகியிருக்கிறது.
இந்த தகவல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுடன் தொடர்ந்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.