இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
x
தினத்தந்தி 7 April 2021 9:50 AM IST (Updated: 7 April 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. 

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 01 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 43 ஆயிரத்து 473- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story