ஆஸ்பத்திரிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் தேவை; நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை


ஆஸ்பத்திரிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் தேவை; நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 8:58 PM GMT (Updated: 2 May 2021 8:58 PM GMT)

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி தி்ட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

13 தலைவர்கள்

நாட்டின் 13 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவே கவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆக்சிஜன் வினியோகம்

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் செய்வதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். தடுப்பூசி திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடியை இதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Next Story